வந்தே மாதரம் விவகாரத்தில் கூட்டணி மோதல்
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக இசைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதால், இண்டி கூட்டணிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஸ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவமும் இசைக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்தார். அதில், வரிகள் நீக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை இசைப்பது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் முடிவை கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி ஆதரித்து, அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கூட்டணி கட்சிகள் உத்தரவிட வேண்டாம்”
காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு தேசிய மாநாட்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது கூறுகையில், ‘வந்தே மாதரம்’ பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்பது குறித்து கூட்டணி கட்சிகள் தங்களுக்கு உத்தரவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும், அனைத்தும் மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் மீது எதையும் திணிப்பதை தங்களது கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும் பஷிர் அகமது தெரிவித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் புகைச்சல்
வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல், இண்டி கூட்டணிக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்
கடந்த மாதம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக இசைக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
அப்போது அவரது நிலைப்பாட்டுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
