“வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் இல்லாமல் பாஜகவை எதிர்க்க முடியுமா?” – திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
சென்னை: வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை முன்வைக்காமல் பாஜகவை திமுகவால் எதிர்க்க முடியுமா என ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தரவு மைய முதலீடு தமிழகத்துக்கு வராமல் போனது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“பெரிய முதலீட்டு முடிவுகள் 3 மாதங்களில் எடுக்கப்படுவதில்லை”
டிசிஎஸ் தரவு மையத்தை தமிழகம் ஏன் இழந்தது என்பது குறித்து விரிவான பதில் தேவைப்படுவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இத்தகைய மிகப்பெரிய முதலீட்டு முடிவுகள் 3 மாதங்களில் எடுக்கப்படுவதில்லை என்றும், இந்தியா முழுவதும் தான் பயணம் செய்யும்போது இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து
திமுக தமக்கு எதிராக விரோதமான அணுகுமுறையை கடைப்பிடித்தபோதும், தமிழகத்திலேயே தொடர்ந்து செயல்படுவது ஏன் என தன்னிடம் பலர் கேட்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அதற்கு தமிழகம் மிகச் சிறந்த மாநிலம் என்றும், திமுக தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் தான் பதிலளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஸோகோ நிறுவனத்துக்கும் தனக்கும் தமிழகத்தின் பரந்த சமூகத்திடம் இருந்து தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட இந்தியர்கள், சனாதனம் குறித்து விமர்சனம்
திமுக அமைச்சர்கள் வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களை கேலி செய்ததாகவும் ஸ்ரீதர் வேம்பு குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளும் இந்தியாவின் பிற பகுதிகளில் கவனிக்கப்படாமல் போகவில்லை என அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு, நவோதயா வித்யாலயா பள்ளிகள், ஹிந்தி மொழி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் திமுக எதிர்த்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“பிற மாநிலங்கள் நடைமுறை அணுகுமுறையை கொண்டுள்ளன”
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பல்வேறு விஷயங்களில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வெளியிலிருந்து வரும் முதலீடுகளை மட்டுமே ஈர்ப்போம் என்ற அணுகுமுறையை திமுக கொண்டிருந்ததாகவும், இந்தியாவின் பிற பகுதிகளுடனான தொடர்பை புறக்கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அணுகுமுறைக்கு பாராட்டு
பாஜகவை எதிர்த்தாலும், வட இந்தியர்களுக்கு எதிரானதாக தான் கருதும் பிரிவினைவாதப் போக்கை தவெக தலைவர் விஜய் கைவிட்டு, ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வதை வரவேற்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், வட இந்தியாவில் விஜய் பிரபலமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு தமிழராக அதனை எண்ணி பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
“வெறுப்புணர்வை கைவிட்டு நடைமுறைக்கு வர வேண்டும்”
தமிழகத்தின் நலனை திமுக உண்மையாக விரும்பினால், வட இந்தியாவைச் சேர்ந்த அனைத்தின் மீதும் கொண்டுள்ளதாக கூறப்படும் வெறுப்பு மனப்பான்மையை கைவிட்டு, நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், சனாதன தர்மம், ஹிந்தி உள்ளிட்ட விவகாரங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை முன்வைக்காமலேயே பாஜகவை திமுக எதிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
