“வதந்திகளும், பொய்களும்…” – முதல்வர் விஜய் பதிலுரை மீது கனிமொழி விமர்சனம்
சென்னை: சட்டம் – ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவை, தற்போது “சர்க்கஸ் கூடாரமாக” மாறியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி, முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், திமுக மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“வரலாறு நீதிக்கட்சி காலத்தில் இருந்து தொடங்க வேண்டும்”
வரலாறு குறித்து பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றும், தமிழ்ச் சமூகத்துக்காக திமுக என்ன செய்துள்ளது என்பதில் இருந்து விவாதத்தை தொடங்க வேண்டும் என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
தவெக மற்றும் அதன் முதல்வர் விஜய்க்கு அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கருணாநிதி மற்றும் திமுக குறித்து அவதூறாக பேசுவதையே அரசியல் தகுதியாக எத்தனை காலத்துக்கு நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
“எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர…”
காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதல்வர் பதிலுரை அளிக்க வேண்டிய நிலையில், எழுதிக் கொடுத்ததை படிப்பதைத் தவிர கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் நீண்ட உரையை நிகழ்த்தியதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முதல்வரின் பதிலுரைக்கு எதிர்வினை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“வாட்ஸ்அப் ஃபேக்டரி பொய்கள்”
கடந்த மூன்று நாட்களாக காவல் துறை மானியக் கோரிக்கைக்கான பதிலுரையை அளிக்க முதல்வர் ஒத்திகை பார்த்ததாக குறிப்பிட்ட கனிமொழி, அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதல்வர் பேசியது மிகக் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றபடி, நீண்ட காலமாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளையும், சமீபத்திய “வாட்ஸ்அப் ஃபேக்டரி பொய்களையும்” கலந்து ஒரு பிரதியை முதல்வரிடம் வழங்கியுள்ளதாகவே தோன்றுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
“சபை சர்க்கஸ் கூடாரமாகிவிட்டது”
சட்டம் – ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவை, தற்போது “சர்க்கஸ் கூடாரமாக” மாறியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், “சத்தமாகச் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல” (Not everything loud is true) என குறிப்பிட்டு, முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பதிலுரையை அவர் விமர்சித்துள்ளார்.
