திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? – ஐகோர்ட் கேள்வி
சென்னை: திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரிய மனுவுக்கு மாவட்ட காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையிடம் அனுமதி கோரி மனு
திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அன்புமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செப்.14 முதல் செப்.17ம் தேதி வரை காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கவும், பின்னர் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஆண்டுதோறும் காவல் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“கடந்த ஆண்டு அனுமதி வழங்கிய நிலையில்…”
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் துறையிடம் கேட்டறிந்து பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
செப்.9ல் காவல் துறை பதில்
இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாவட்ட காவல் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்.9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
