கோவில் சொத்துக்கள், வாடகை விபரங்களை வெளியிட உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துக்கள், வாடகை விபரங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை 3 மாதங்களுக்குள் இணையதளத்திலும், கோவில் அறிவிப்பு பலகைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சில விபரங்களை கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோவில் நிர்வாகத் தகவல்களை வெளிப்படையாக வெளியிட உத்தரவிட்டுள்ளார்.
எந்தெந்த தகவல்களை வெளியிட வேண்டும்?
கோவில்கள் தொடர்பான முக்கிய தகவல்களை 90 நாட்களுக்குள் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் மற்றும் வாடகை
கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகள், குத்தகைதாரர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் வாடகை நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
வங்கி மற்றும் நன்கொடை விபரங்கள்
கோவில்களின் வங்கி வைப்பு நிதி விபரங்கள், சேமிப்பு கணக்கு எண்கள் மற்றும் உபயதாரர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் மற்றும் சேவை கட்டணங்கள்
அர்ச்சகர்கள், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களின் விபரங்கள் மற்றும் கோவில்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணங்கள் குறித்த தகவல்களையும் வெளியிட வேண்டும்.
வரவு-செலவு மற்றும் தணிக்கை அறிக்கைகள்
கோவில்களின் வரவு-செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள் மற்றும் அறங்காவலர் குழு எடுத்த தீர்மானங்கள் உள்ளிட்ட நிர்வாகத் தகவல்களும் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அறநிலையத் துறையின் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்.
கோவில் அறிவிப்பு பலகையிலும் தகவல்கள் இடம்பெற வேண்டும்
கோவில்களில் நடை திறக்கும் நேரம், பூஜை நடைபெறும் நேரங்கள், திருவிழாக்கள் மற்றும் ஸ்தல வரலாறு உள்ளிட்ட 11 வகையான தகவல்களை கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் பதாகைகள் அல்லது அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நவ., 30ல் அறிக்கை தாக்கல்
இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான ஆவணங்களுடன், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரும், இணை ஆணையருமான தங்கம், நவம்பர் 30-ம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
