FCRA திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட குழு
புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இந்த மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் எனப்படும் FCRA-வில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மத்திய அரசு அனுப்பியது.
சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் குழு
மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு பீஹாரின் பெட்டியா தொகுதி பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிக்கிறார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த எம்பிக்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ள இந்தக் குழுவில் லோக்சபாவைச் சேர்ந்த 21 எம்பிக்களும், ராஜ்யசபாவைச் சேர்ந்த 10 எம்பிக்களும் உள்ளனர்.
இதில் பாஜகவிலிருந்து 14 எம்பிக்களும், காங்கிரஸிலிருந்து 5 எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர். ஜேடியு, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்து தலா 2 எம்பிக்களும், சமாஜ்வாதி, ஐயுஎம்எல், சிவசேனா, என்சிபி (எஸ்பி), என்சிபி மற்றும் டிடிபி ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்பியும் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையை லோக்சபாவில் சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்
வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் கட்டுப்பாடுகள்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு நன்கொடையாக வரும் நிதியை தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் எவ்வாறு பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை FCRA சட்டம் கட்டுப்படுத்துகிறது. இந்த சட்டத்தின் விதிகளை மேலும் கடுமையாக்கும் வகையில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
உரிமம் ரத்தானால் சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்
ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ அல்லது அந்த நிறுவனம் தானாக முன்வந்து உரிமத்தை ஒப்படைத்தாலோ, வெளிநாட்டு நிதி மூலம் வாங்கப்பட்ட நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துகளை அரசு நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துகளை அரசு பயன்படுத்தலாம்
இவ்வாறு கையகப்படுத்தப்படும் சொத்துகளை அரசு தனது துறைகளுக்கு மாற்றலாம் அல்லது அவற்றை விற்று கிடைக்கும் தொகையை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உடனடியாக தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
விசாரணைக்கும் முன் அனுமதி
FCRA விதிகளை மீறியதாக ஒரு அமைப்பு மீது விசாரணை நடத்த வேண்டுமெனில், அதற்கு மத்திய அரசின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படும் வகையிலும் திருத்த மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
