ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா பேட்டி
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, தமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஒரு பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஜிதேந்திர மிஸ்ரா, தன்னைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவுக்கும், ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளைக்கும், ஸ்ரீ ராமருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
‘இது ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்’
ஜிதேந்திர மிஸ்ரா கூறுகையில், பல்வேறு வேட்பாளர்களில் இருந்து தன்னைத் தேர்வு செய்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார்.
விமானப்படையில் பல ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பிறகு, தற்போது பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஸ்ரீ ராமர் வழங்கியிருப்பதை அவரது ஆசீர்வாதமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான திறனையும் வலிமையையும் இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?
விமானப்படையில் நீண்டகால சேவை
ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் நீண்டகாலம் பணியாற்றியவர். 3,000 மணி நேரத்துக்கும் அதிகமான விமானப் பயண அனுபவத்தை பெற்றுள்ள அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
18 வகையான போர் விமானங்களை இயக்கிய அனுபவம்
மிராஜ்-2000 உள்ளிட்ட 18 வகையான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன் பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பங்கு
விமானப்படையின் மேற்கு மண்டலப் பிரிவின் தலைவராகவும் ஜிதேந்திர மிஸ்ரா பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் ஓய்வு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கார்கில் போர், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
சிறப்பான சேவைக்காக உயரிய விருது
திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான உயரிய ‘சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படையில் நீண்டகாலம் தேசத்திற்கு சேவை செய்த ஜிதேந்திர மிஸ்ரா, தற்போது அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சிஇஓவாக பக்தர்களுக்கு சேவை செய்யும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
