சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை தெளிவான பதில் அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அன்று கேள்விகள் கேட்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும் என அவர் சவால் விடுத்தது சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக ஆட்சிக் காலத்தில் அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு அரசை குற்றம்சாட்டியவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு தனிமனித ஒழுக்கமே காரணம் என கூறுவதாகவும் உதயநிதி விமர்சித்தார்.
மக்கள் கேள்வி கேட்கும் பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், சரியான கேள்விகளை எழுப்பி அரசிடம் பதில் பெற வேண்டிய இடத்தில் தாங்கள் இருப்பதாக கூறினார்.
மேலும், “லாஜிக்கே இல்லாத குட்டிக் கதைகளை சொல்லாமல் முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும். ரீல்ஸ் கண்டெண்டுக்காக இல்லாமல், ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல், டேக் டைவர்ஷன் இல்லாமல் பதில் அளிக்க வேண்டும்” என உதயநிதி பேசினார்.
முதல்வர் விஜய் பதிலடி
உதயநிதி பேசி முடித்ததும் முதல்வர் விஜய் பதிலளித்தார்.
சட்டசபை உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கட்கிழமை தெளிவான விளக்கம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். தான் அவையில் இல்லாவிட்டாலும், எந்தெந்த உறுப்பினர்கள் என்ன கேள்விகளை எழுப்புகிறார்கள் என்ற தகவல் தனக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.
“எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலை சொல்கிறேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு பிராமிஸ் கேட்கிறேன். அன்று யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என முதல்வர் விஜய் கூறிவிட்டு அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
“யார் ஓடிப்போனது என்பதை மக்கள் பார்த்தார்கள்”
இதற்கு பதிலளித்த உதயநிதி, “இதைச் சொல்லிவிட்டு யார் ஓடிப்போனது என்பதை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என விமர்சித்தார்.
முதல்வர் தனது பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும், முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதாக குறிப்பிட்ட உதயநிதி, மீண்டும் தங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தாமல், தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நன்றாக தயாராகி வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“இப்போதே பதிலளிக்கலாம்”
இதையடுத்து, “அவர் ஏற்கனவே தயாராகித்தான் வந்திருக்கிறார்” என சபாநாயகர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த உதயநிதி, “அப்படி என்றால் இப்போதே அவர் பதிலளிக்கலாம்” என கூறினார்.
இதனால் சட்டசபையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தரமான பதிலடி முதல்வர் மூலமாக தரப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதல்வர் விஜய் திங்கட்கிழமை சட்டசபையில் அளிக்க உள்ள பதில் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
