மதுரை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர், பட்டியலினத்தவர் (SC) என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் தென்கரையைச் சேர்ந்த ரவிக்குமார், தான் இந்து ஆதிதிராவிடர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக பள்ளி முதல்வர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் நிர்வாகம் தன்னை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பள்ளித் தலைவர், முதல்வர் மற்றும் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
பள்ளி நிர்வாகம் கூறியது என்ன?
இந்த மனுவை நீதிபதி எஸ். விக்டோரியா கவுரி விசாரித்தார்.
அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், மனுதாரர் கடந்த 2015-ம் ஆண்டு உசிலம்பட்டியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞானஸ்நானம் பெற்றதாகவும், அதன் பின்னர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனது மதமாற்றத்தை மறைத்துவிட்டு பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் சட்டப் பாதுகாப்பை கோருவதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிமன்றம் கூறியது என்ன?
வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவர் வேறு மதத்தை பின்பற்றி அந்த மதத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டே, சட்டரீதியான சலுகைகளைப் பெற பட்டியல் ஜாதி அந்தஸ்தை கோர முடியாது என தெரிவித்துள்ளார்.
1950-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றும் நபர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டார் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில், மனுதாரர் பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பை கோர முடியாது எனக் கூறி, அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
