சென்னை: ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திட்டங்களையும் அறிவித்தார்.
திடக்கழிவில் இருந்து மின்சாரம்
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறனிலும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறனிலும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மொத்தம் ரூ.547 கோடியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ.110 கோடி ஒதுக்கப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற பணிகள் ரூ.165 கோடியில் மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.275 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,400 கோடி
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சியின் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.960 கோடியில் செயல்படுத்தப்படும்.
சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.
கடல்நீரை குடிநீராக்க ரூ.4,800 கோடி திட்டம்
வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடியும் ஒதுக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்
பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதுடன், பசுமைத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக மக்கள் இயக்கத்தின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.130 கோடியில் பெரிய பூங்காக்களும், மாநிலம் முழுவதும் ரூ.175 கோடியில் 250 புதிய பூங்காக்களும் அமைக்கப்படும். மொத்தம் ரூ.305 கோடியில் பூங்கா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பள்ளி உள்கட்டமைப்பு பணிகள் ரூ.335 கோடியில் மேற்கொள்ளப்படும்.
சிதம்பரம், கடலூர், கன்னியாகுமரிக்கு புதிய திட்டங்கள்
சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளை தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ.36 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.
சென்னை மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
செப்.15 முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை தொடர்பான அனைத்து அலுவலக சேவைகளையும் எளிதாக்கும் வகையில், எந்த இடத்திலிருந்தும் பதிவு மற்றும் லைசென்ஸ் தொடர்பான சேவைகளைப் பெறும் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
புதிய வாகனம் வாங்குவோர் Digital RC-ஐ இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செப்டம்பர் 15 முதல் மாநிலம் முழுவதும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கும் வகையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியாக போராடியபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய மற்றும் ஜனநாயக அடிப்படையில் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சிலர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் குறிப்பிட்டார்.
அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்கள் தொடர்பாகவும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உறுதுணையாக நிற்கும் என்றும், இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்றும் முதல்வர் விஜய் கூறினார்.
