புதுடில்லி: மின்சார வாகனங்களுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஒடிசாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் நிஷிதா மற்றும் நிகிதா, ‘ஃபோர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30’ பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த நிஷிதா மற்றும் நிகிதா, ‘நெக்ஸஸ் பவர்’ என்ற டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை இணைந்து தொடங்கினர். பயிர் கழிவுகளை மூலப்பொருளாக பயன்படுத்தி, மின்சார வாகனங்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரிகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவர்களின் புதுமையான முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஃபோர்ப்ஸ் இந்தியா மற்றும் ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 30 அண்டர் 30 தொழில்முனைவோர் பட்டியலில் சகோதரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இருவருக்கும் தற்போது 20 வயதே ஆகிறது. தொழில்முனைவில் கால் பதிப்பதற்கு முன்பே, தங்களது தனித்துவமான ஃபேஷன் மற்றும் நடன வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்திருந்தனர். முன்னணி உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளின் விளம்பரங்களிலும் பங்கேற்றுள்ளனர்.
பள்ளி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தொடங்கிய இவர்களின் பயணம், தற்போது டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர்கள், இளம் வயதிலேயே தொழில்முனைவோர் உலகில் கவனம் பெற்றுள்ளனர்.
“EV உருவாக்க நினைத்தோம்; பேட்டரிதான் மிகப்பெரிய சவால்”
இதுகுறித்து நிஷிதா கூறுகையில், 13 அல்லது 14 வயதிலேயே தொழில்முறை கலந்துரையாடல்களில் பங்கேற்றது தங்களுக்கு தனித்துவமான தன்னம்பிக்கையை அளித்ததாக தெரிவித்தார்.
முதலில் மின்சார வாகனங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தங்களது பயணத்தை தொடங்கியதாகவும், ஆனால் அதில் பணியாற்றத் தொடங்கியபோது பேட்டரிதான் மிகப்பெரிய சவாலாக இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து, பேட்டரி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியதாக தெரிவித்தார்.
11 மற்றும் 12-ம் வகுப்புகளில் வணிகவியலும், அதன்பின்னர் வணிக மேலாண்மையும் படித்ததாக கூறிய நிஷிதா, பேட்டரி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் பெயர்களையும் செயல்முறைகளையும் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
சகோதரிகளாக இருந்தாலும், நிறுவனத்தை இணைந்து நடத்தும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாகவும் அவர் நகைச்சுவையாக தெரிவித்தார். சிறுவயதில் சண்டையிட்டதைவிட, பணியின் போதுதான் அதிகமாக வாக்குவாதம் செய்வோம் என்றும், இருப்பினும் எதிர்காலத்தை நோக்கி இணைந்து செயல்படுவோம் என்றும் நிஷிதா கூறினார்.
இயந்திரங்கள் முதல் பேட்டரி தொழில்நுட்பம் வரை
சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள், விமானங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீது இருவருக்கும் ஆர்வம் இருந்துள்ளது. 2017-18 காலகட்டத்தில் மின்சார வாகனங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணத்தை தொடங்கிய அவர்கள், பின்னர் அதில் பேட்டரியே முக்கிய சவால் என்பதை உணர்ந்தனர்.
அந்த சவாலைத் தீர்க்கும் முயற்சியாக பேட்டரி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, தற்போது நெக்ஸஸ் பவர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் சமூக ஊடகத் துறைகளில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இந்த இரட்டை சகோதரிகளின் சாதனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
