சென்னை: தமிழகத்தில் எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விரிவுபடுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக குறைந்தபட்சமாக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதிக்காக ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கட்டணம் கோவில்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டது அல்ல என்றும், செல்போன்களை பாதுகாக்கும் பணியாளர்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படலாம் என அவர் கூறினார். சிறிய கோவில்களில் கிடைக்கும் வருவாயை மட்டுமே கொண்டு செல்போன் பாதுகாப்பு வசதிக்கான செலவுகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால், அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கும் வகையில் ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோவிலுக்கு அருகில் வசிக்கும் பக்தர்கள் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு கோவிலுக்கு வரலாம் என்றும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்களது வாகனம் அல்லது தங்குமிடத்தில் செல்போனை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்லலாம் என்றும் அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தினார்.
