மும்பை: மகாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வரும் துக்காராம் முண்டே மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தலைமைச் செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்பு ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்ற துக்காராம் முண்டே, தனது 21 ஆண்டுகால அரசு பணியில் 25 முறை பணியிட மாற்றங்களை சந்தித்தவர். அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரியாக அறியப்படும் அவர், தற்போது உணவு பாதுகாப்புத் துறையிலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரபலங்கள், சாமானியர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய உரிமம் இல்லாமல் செயல்படும் உணவகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் துக்காராம் முண்டேயின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளன.
இதுகுறித்து பேசிய எப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி, “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற கூற்றுக்கு துக்காராம் முண்டேயின் செயல்பாடுகள் ஒரு சான்று” என்று குறிப்பிட்டார்.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வரலாற்று ரீதியாக போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இந்தப் பொறுப்பை ஏற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். சில அதிகாரிகள் உணவு பாதுகாப்பு ஆணையர் பதவியை தண்டனைக்குரிய பதவியாகவே கருதியதாகவும் கூறினார்.
ஏன் உணவு பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை?
சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல ஆண்டுகள் பழமையான கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், ஒப்பீட்டளவில் உணவு பாதுகாப்புத் துறை புதியதாக இருப்பதால், அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடமும் அதிகாரிகளிடமும் போதிய புரிதல் இல்லை என்று ரஜித் புன்ஹானி தெரிவித்தார்.
பல இடங்களில் உணவு பாதுகாப்பு ஆணையர் பொறுப்பு, ஏற்கனவே வேறு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு பாதுகாப்பு முக்கியமான துறையாக கருதப்பட்டிருந்தால், தனியாக உணவு பாதுகாப்பு ஆணையரை நியமித்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனி ஆணையர் அவசியம்
ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக உணவு பாதுகாப்பு ஆணையர் நியமிக்கப்படுவது அவசியம் என்றும், தற்போது அது கட்டாயமாகக் கருதப்பட வேண்டும் என்றும் ரஜித் புன்ஹானி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் துக்காராம் முண்டே மேற்கொண்டு வரும் பணிகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூடுதல் அதிகாரிகளை நியமிக்காமல் கிடைத்த வளங்களைக் கொண்டு அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
துக்காராம் முண்டேயின் அதிரடி நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவத்தையும், மாநில அளவில் உணவு பாதுகாப்பு ஆணையர்களின் பொறுப்பையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாக ரஜித் புன்ஹானி தெரிவித்தார்.
