அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நடைபெற்ற தேர்வு நடவடிக்கையில் சுமார் 5,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான 18 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி, ஷீரடி சாய்பாபா அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மற்றும் விஞ்ஞானி சுரேஷ் ஹவாரே ஆகியோர் அடங்கிய குழு நேர்காணலை நடத்தியது.
இதன் முடிவில், இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திர மிஸ்ரா, அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?
ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் சுமார் 39 ஆண்டுகள் பணியாற்றியவர். போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
1986 டிசம்பர் 6-ம் தேதி விமானப்படையில் இணைந்த அவர், 1991-ல் லெப்டினன்ட், 2003-ல் விங் கமாண்டர், 2009-ல் குரூப் கேப்டன், 2013-ல் ஏர் கமாண்டர் பதவிகளுக்கு உயர்வு பெற்றார்.
2019 ஜூலை 1-ம் தேதி வைஸ் மார்ஷலாகவும், 2023 ஜனவரி 1-ம் தேதி ஏர் மார்ஷலாகவும் பதவி உயர்வு பெற்றார். 2025 ஜனவரியில் மேற்கு வான் கட்டளைப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். 2026 ஏப்ரல் 30-ம் தேதி விமானப்படை பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
