சென்னை: ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்திலும் ‘பாரத் டாக்ஸி’ சேவையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நகர்ப்புறங்களில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தனியார் செயலிகளில் பயணிகள் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதால், பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும் ஒரே செயலி மூலம் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவைகளை குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் பெறும் வகையில் ‘பாரத் டாக்ஸி’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது டில்லி, குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநிலத் தலைவர் பால் பர்ணபாஸ் கூறுகையில், சென்னை போன்ற பெருநகரங்களில் குறுகிய தூரப் பயணங்களுக்குக்கூட தினமும் ஏராளமானோர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இல்லாததால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், ‘பாரத் டாக்ஸி’ சேவையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் தமிழகத்திலும் இந்த சேவையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த சேவையை அமல்படுத்துவதற்கு முன் நுகர்வோர் அமைப்புகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் அரசு முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
