திருநெல்வேலி: தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவினர் சமூக வலைதளங்களில் பொய்யான ரீல்ஸ்களை பரப்பி வருவதாகவும், இது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் முன்பு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அமைச்சர்கள் தரக்குறைவாக பேசுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் தங்களது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்றாலும், நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர் மத அடையாளத்தை முன்னிறுத்துவதும், எம்எல்ஏக்கள் சாதிய அடையாளங்களை முன்வைப்பதும் சட்டசபையின் மாண்பை பாதிக்கும் என அவர் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையை மாற்றியமைக்க ரூ.5.40 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான டெண்டர் கோரப்படவில்லை என அமைச்சரே ஒப்புக்கொண்டதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். டெண்டர் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டிருப்பது கூட்டு ஊழல் எனவும் அவர் விமர்சித்தார்.
மேலும், தமிழர்களின் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற ஜல்லிக்கட்டை சட்டசபையில் கொச்சைப்படுத்திப் பேசுவதாகவும், இது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்த புரிதலை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோத்ரா சம்பவம் குறித்து சட்டசபையில் பேசியதையும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். இதுபோன்ற விவகாரங்களை சட்டசபையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண் வழங்குவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
