கன்னியாகுமரி: அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் வகையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களிடம் உள்ள ரொக்கப் பணத்தின் விவரங்களை தினமும் பதிவு செய்ய வேண்டும் என்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரின் சுற்றறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரொக்கப் பணம் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டிய அவஊழல் தடுப்புசியம் குறித்து கருத்து தெரிவித்திருந்தது.
அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும் நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரும் ரொக்கப் பணத்துக்கு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களிடம் உள்ள ரொக்கப் பணத்தின் விவரங்களை குறிப்பிட்ட பதிவேட்டில் பதிவு செய்து, அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினசரி ரொக்கப் பணம் பதிவு
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் தினசரி கையிருப்பு ரொக்கப் பணத்தை பதிவு செய்வதற்காக தனிப்பட்ட பதிவேடு பராமரிக்க வேண்டும். அந்த பதிவேடு வருகைப் பதிவேட்டுடன் அலுவலகத் தலைவரின் ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரின் பொறுப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், பதிவேட்டை மேல் அதிகாரிகள் மாதத்திற்கு இரண்டு முறை ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது தேவைக்கு அதிகமாக ரொக்கப் பணத்தை அலுவலகத்தில் கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கை எச்சரிக்கை
ரொக்கப் பணப் பதிவேட்டை முறையாக பராமரிக்காத அலுவலகங்களில், அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டை பராமரிக்கும் பணியாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
