366 கோவில்களில் ரூ.245 கோடியில் திருப்பணி: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சிதிலமடைந்த 366 கோவில்களில் ரூ.245 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கோவில்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் அமைச்சர் ரமேஷ் மொத்தம் 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
கோவில்களில் திருப்பணி
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 64 கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
முழுமையாக சிதிலமடைந்த 75 கோவில்களுக்கு ரூ.50 கோடியும், பகுதியளவு சிதிலமடைந்த 75 கோவில்களுக்கு ரூ.35 கோடியும், மேலும் 152 கோவில்களுக்கு ரூ.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.5.50 கோடியில் மூன்றாம் சுற்று மண்டபம் அமைக்கப்படும். அன்பில் மாரியம்மன் கோவிலில் ரூ.1.50 கோடியில் பக்தர்களுக்கான மண்டபம் கட்டப்படும்.
கோவில் குளங்கள் மற்றும் தேர்கள்
சிதிலமடைந்த 100 கோவில் குளங்களை ரூ.40 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.16 கோடி செலவில் 25 புதிய தேர்கள் அமைக்கப்படும்.
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் தலா ரூ.2 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் உருவாக்கப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.5 கோடியில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.11 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து இலவசமாக அழைத்து வர ரூ.1 கோடி செலவில் 4 மினி பேருந்துகள் வாங்கப்படும்.
அதேபோல், நெல்லை மாவட்டம் காரையார் அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் இலவசமாக சென்று வர ரூ.1 கோடியில் 2 பேருந்துகள் வாங்கப்படும்.
கோவில் பணியாளர்களுக்கு சலுகைகள்
கோவில் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு 240 நாட்களாக உயர்த்தப்பட்டு, அதற்கான பணப்பலன்கள் வழங்கப்படும்.
கோவில் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்படும்.
மேலும், கோவில் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களை நிரப்ப திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
கோவில் வரலாற்று நூல்கள் வெளியீடு
இதுவரை அச்சிடப்படாத கோவில் வரலாறு மற்றும் பக்தி தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட 108 நூல்கள் வெளியிடப்படும். கோவில் தல வரலாறுகள் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.
மேலும் அருளாளர் விழா, ஆழ்வார்கள் விழா, சித்தர்கள் விழா மற்றும் கிராம தெய்வங்களின் கலை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் அறிவித்தார்.
