தமிழகத்தில் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதற்காக திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் வஞ்சிபாளையம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தயாரிக்கப்படும் சிலைகள் செப்டம்பர் முதல் வாரத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
சிவரூப விநாயகர், தர்பார் விநாயகர், அன்ன வாகனம் விநாயகர், ஆதியோகி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 3 அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
600 இடங்களில் விசர்ஜன ஊர்வலம்
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், சுமார் 20 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும், 600 இடங்களில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
திருப்பூர் நகரில் மட்டும் 1,008 சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும் 5,000 சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 முதல் கொண்டாட்டம்
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கும் என்றும், ‘தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து மதமும் ஒன்று’ என்ற கருப்பொருளில் ஒரு வார காலம் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசர்ஜன ஊர்வலம் திருப்பூரில் செப்டம்பர் 17-ம் தேதியும், கோவையில் செப்டம்பர் 18-ம் தேதியும், சென்னையில் செப்டம்பர் 20-ம் தேதியும் நடைபெற உள்ளதாக ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
