போலீஸ் ஸ்டேஷனில் ராகுல் நடத்தியது நாடகம்: நட்டா தாக்கு
புதுடில்லி: மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் டில்லி போலீஸ் ஸ்டேஷன் முன்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுலின் போராட்டம் மாணவர்களின் நலனுக்காகவோ அல்லது நீதிக்காகவோ நடைபெறவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரக்தியையும் ஊடக கவனத்தை ஈர்க்கும் முயற்சியையும் வெளிப்படுத்துவதாகவும் நட்டா தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தர் விவகாரம்
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அமைத்துள்ளதாக நட்டா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீஸ் ஸ்டேஷன் முன்பு கேமராக்களுக்கு முன்னால் அமர்ந்து போராட்டம் நடத்துவதன் மூலம் ராகுல் காந்தி எதை நிரூபிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை இல்லையா என்றும் நட்டா கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் தற்போதைய போராட்டம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வந்தே மாதரம் விவகாரம் குறித்த விமர்சனம்
வந்தே மாதரம் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாகவும் நட்டா தெரிவித்தார்.
தேசியப் பாடல் தொடர்பாக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ராகுல் காந்தி இந்தப் போராட்டத்தை நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மூவர்ணக் கொடி வடிவிலான கேக்கை காங்கிரஸ் தலைவர் வெட்டிய சம்பவத்தையும் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எதிர்கொள்ளும் விமர்சனங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே ராகுல் காந்தி இந்தப் போராட்டத்தை நடத்தியதாக நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
