சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றும், அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றார்.
வாகனத்தின் டிரைவர், எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் மாதந்தோறும் ரூ.75,000 வாகனப் படியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அலுவலகப் பணிகளில் உதவுவதற்காக ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதுடன், அதற்காக மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஜோதிமணி சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு
ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இதன் மூலம் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
இந்த விலை உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் முக்கிய அறிவிப்புகள்
சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையமும் அமைக்கப்படும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், தரமான சிகிச்சையை வழங்கவும் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும், புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
