சென்னை: தமிழக சட்டசபையில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் விஜய், தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசிக்கொண்டிருந்தபோது, தவெக மற்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா என எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், ஆதாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுவதால் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு நிதியமைச்சர் மூன்று துறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதற்கான கோப்புகள் தனது மேஜையில் இருப்பதாக தெரிவித்திருந்ததை முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார்.
அந்த கோப்புகள் சாதாரணமாக குறிப்பிடப்பட்டவை அல்ல என்றும், உண்மையாகவே தனது மேஜையில் இருப்பதாகவும் கூறிய முதல்வர், அவற்றில் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அந்த விவரங்களை இப்போதே வெளியிடுமாறு தங்களை தூண்ட வேண்டாம் என்றும், எதை எப்போது வெளியிட வேண்டும் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்து வெளியிடுவோம் என்றும் முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார்.
