சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று இரவு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மாநாடு நடைபெறும் கோவளம் நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.
அங்கு தென் மாநில முதல்வர்களுடன் நடைபெறும் இரவு விருந்திலும் அவர் பங்கேற்க உள்ளார். நாளை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் சென்னை திரும்பி, அங்கிருந்து டில்லி செல்ல உள்ளார்.
இதற்கிடையில், அமித் ஷாவின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
