புதுடில்லி: பாஜகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய தேசிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைத்தலைவர்கள், தேசிய பொதுச்செயலாளர்கள், தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 13 துணைத்தலைவர்கள், 8 தேசிய பொதுச்செயலாளர்கள் மற்றும் 16 தேசிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கும் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய நிர்வாகத்தில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய நியமனங்கள்
பாஜக தேசிய துணைத்தலைவர்களாக வசுந்தரா ராஜே, திரத் சிங் ராவத், ராம் மாதவ், பைஜெயந்த் ஜெய் பாண்டா, புரந்தேஸ்வரி, ரேகா வர்மா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல். சந்தோஷ் தொடர்ந்து பொறுப்பு வகிக்கிறார். தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர்களாக சிவப்பிரகாஷ் மற்றும் சவுதன் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொதுச்செயலாளர்களாக வினோத் தாவ்தே, சுனில் பன்சால், பிப்லப் குமார் தேப், ஸ்மிருதி இரானி, சந்தோஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரிஸ் திவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய செயலாளர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த சுரேந்திரன், நாகாலாந்தைச் சேர்ந்த பங்னோன் கோன்யாக், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேசன், கேரளாவைச் சேர்ந்த அனில் அந்தோணி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
பெண்கள் அணிக்கு புதிய தலைவர்
பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக இதுவரை இருந்த வானதி சீனிவாசனுக்கு பதிலாக, சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் அணி தலைவராக ஹேமங் ஜோஷியும், ஓபிசி அணி தலைவராக அமர்பால் மவுரியாவும், விவசாயிகள் அணி தலைவராக பன்சிலால் குர்ஜாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்சி அணி தலைவராக ஷிவேஷ் குமார் ராம், எஸ்டி அணி தலைவராக மன்னாலால் ராவத், சிறுபான்மையினர் அணி தலைவராக குன்வர்ஷீத் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொருளாளராக பியூஷ் கோயலும், தேசிய அலுவலக பொறுப்பாளராக தருண் சுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகம் மற்றும் சமூக வலைதள பொறுப்புகள்
கட்சியின் ஊடக கன்வீனராக அனில் பவுலானியும், சமூக ஊடக கன்வீனராக தீபக் மாஷ்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்ந்த பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
பாஜகவின் புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் அமைப்பு ரீதியான அனுபவம், உற்சாகம் மற்றும் அடிமட்ட அளவிலான தொடர்புகளை ஒருங்கிணைத்து கட்சியை மேலும் பலப்படுத்துவார்கள் என்றும், பொதுமக்கள் சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
