தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைத்திருந்த பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, போலீஸ் எஸ்ஐயுடன் மோதலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ரயிலடியில் கட்சி சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பதாகையை அகற்றினர்.
இதனால் அதிருப்தியடைந்த விசிகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயிலடி சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.
போலீஸாருடன் வாக்குவாதம்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், வழிவிடுமாறு கூறியதால், அவருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவத்தை சமாதானப்படுத்த முயன்ற போலீஸாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
எஸ்ஐ – இளைஞர் மோதல்
இந்த மோதலில் காவல் எஸ்ஐ அப்துல் ரஹீம் அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக அந்த இளைஞரும் எஸ்ஐயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், போலீஸார் அந்த இளைஞரை மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
