புதுடில்லி: இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானத்துக்கான இன்ஜினை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
அதிநவீன போர் விமானங்களுக்கான இன்ஜின்களை பெறுவதில் இந்தியா நீண்ட காலமாக வெளிநாடுகளை சார்ந்திருந்தது. உள்நாட்டிலேயே விமான இன்ஜின்களை உருவாக்குவது பாதுகாப்புத் துறையின் முக்கிய தேவையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனமும் சர்வதேச அளவில் விமான இன்ஜின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் ஏரோ என்ஜின் வளாகம்
இது தொடர்பாக இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தியாவில் விமான இன்ஜின் தொடர்பான ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் இன்ஜின்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இன்ஜின்களின் தரம் மற்றும் நீண்டகால பராமரிப்பை உறுதி செய்வதற்கான கட்டமைப்பையும் உருவாக்குவது இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது.
இரு நிறுவனங்களின் திறன்கள் இணைப்பு
இந்த கூட்டணியின் மூலம் ரோல்ஸ் ராய்ஸின் விமான இன்ஜின் தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்துடன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் திட்டச் செயலாக்க திறன்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்துக்குத் தேவையான இன்ஜினை உள்நாட்டிலேயே உருவாக்குவதே கூட்டணியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விமான இன்ஜின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
