சென்னை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட வேண்டும் என மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே சில நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற காட்சிகளை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால், காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விபத்து தடுப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
விதிமீறினால் வாகனம் பறிமுதல்
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரின் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட போலீசார் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய புதிய ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே வாகனத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 7 மணிக்கு பணிக்கு வரும் போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார்களா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம்
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மண்டல ஐ.ஜி.,க்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
