புதுடில்லி: இன்றைய சமூக ஊடக மற்றும் ‘ரீல்ஸ்’ காலகட்டத்தில், குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சித்தால் வாழ்க்கைப் பயணம் பாதியிலேயே முடிந்துவிடும் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எழுதிய ‘Triumph of the Indian Republic: My Life, My Struggles’ என்ற சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடினமான சூழ்நிலைகளை கடந்து, உறுதியான மனப்பான்மையுடன் நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை ஒருவர் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர் பொது வாழ்க்கையில் தொடர்ந்து பங்களித்து வருவதாகவும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நேரடியாக அனுபவித்த ஒருவரின் வாழ்க்கையின் மூலம் புரிந்துகொள்ள சுயசரிதைகள் உதவுவதால், இளைஞர்கள் அவற்றை படிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
“ரீல்ஸ் யுகத்தில் குறுக்கு வழிகளைத் தேடாதீர்கள்”
இன்றைய காலகட்டத்தில் குறும்பட வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக பிரபலங்கள் இளைஞர்களை வேறு பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும் என்றும், வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற முயற்சித்தால் பயணம் பாதியிலேயே முடிந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் சவால்களில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
எதிர்காலத்தில் ராம்நாத் கோவிந்தைப் போன்ற மேலும் பல இளைஞர்கள் நாட்டிற்கு தேவை என்றும், சூழ்நிலைகளால் துவண்டு போகாமல் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் உறுதியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய இளைஞர்கள் ‘சுயசார்பு இந்தியா’ உருவாகும் பாதையை வலுப்படுத்துவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
