ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை போர் நிறுத்தம் ஏற்படவில்லை.
இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, அமெரிக்காவின் இந்த கூற்று உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மீண்டும் திறக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா போர் மற்றும் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவதுடன், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், லெபனான் மற்றும் காசா உள்ளிட்ட பிராந்தியங்களில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படாது என்றும் ரெஸாயி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வருவது உண்மை நிலையை மாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
