சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 12) அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடைபெற்றன. கடந்த 2024ஆம் ஆண்டு அந்தமான் பகுதியில் 5,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் விஜயபுரத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் நடைபெற்ற நடவடிக்கையில், படகு ஒன்றில் இருந்த மியான்மரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மியான்மரில் இருந்து செயல்பட்டு வருவதாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் பயங்கரவாத தொடர்புகள் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
