சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தில் பேசிய அவர், பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் அதிகாரம் குறித்து விரிவாக பேசினார்.
பெண்களுக்கு அரசியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது சலுகை அல்ல என்றும், அது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சார்ந்த உரிமை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். நாட்டின் மக்கள்தொகையில் பெண்கள் சரிபாதியாக உள்ள நிலையில், அவர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கல்வி, சமூகநீதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும், சுதந்திரப் போராட்டம் முதல் சமூகநீதிப் போராட்டங்கள் வரை தமிழக பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் இடஒதுக்கீடு
2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், தற்போது 2026ஆம் ஆண்டு சட்டசபையில் 23 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், மொத்த உறுப்பினர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை என்றும் அவர் கூறினார்.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மேலும் ஒத்திவைக்கக் கூடாது என்றும், இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் தமிழக அரசு முன்னோடியாக செயல்பட்டு வருவதாக கூறிய விஜய், தமிழக அமைச்சரவையில் நான்கு பெண் அமைச்சர்கள் இருப்பதையும், பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்புப் படை செயல்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
“ஒரு பெண் அதிகாரம் பெறும்போது அந்த குடும்பம் உயர்கிறது; ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது அந்த நாடே உயரும்” என்று கூறிய அவர், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான கோரிக்கைகள்
லோக்சபாவில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையான 543 இடங்களையும் நிரந்தரமாக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போதுள்ள லோக்சபா தொகுதிகளின் மாநில வாரியான பிரதிநிதித்துவத்தை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
யார் ஆதரவு? யார் எதிர்ப்பு?
முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, விசிக, இந்திய முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
அதேநேரத்தில், அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேசுகையில், நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்வதில் தவறில்லை என்று தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அதிமுக எதிர்ப்பதாகவும் கூறினார்.
எனினும், வரும் லோக்சபா மற்றும் அதன்பிறகு நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் தீர்மானத்தின் குறிப்பிட்ட அம்சத்திற்கு மட்டும் அதிமுக ஆதரவு அளிப்பதாக இ.பி.எஸ். தெரிவித்தார்.
