புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி, மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 139வது கூட்டம் இன்று (ஆகஸ்ட் 11) டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக அதிகாரிகள் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் மாதத்திற்கான தமிழகத்தின் நீர் பங்கீட்டில் வழங்க வேண்டிய 45.5 டிஎம்சி காவிரி நீரையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள நீரையும் கர்நாடகா வழங்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி வீதம் காவிரி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 15 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
