மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்த முயன்றதாலேயே, கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்ட நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
“இளைஞர்கள் நம் குழந்தைகள்”
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜி.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் என்று குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினர் தங்களது குழந்தைகள் போன்றவர்கள் என்றும், அவர்களை சிலர் தவறாக வழிநடத்த முயன்றதால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார்.
இளைஞர்களுடன் தனக்கு எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும், அமைச்சர் பதவி தனக்கு முக்கியமானது அல்ல என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
“இளைஞர்கள் நாட்டை விஸ்வ குருவாக்குவார்கள்”
இந்தியாவில் ஆண்டுதோறும் குறைந்தது 2 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், 10 ஆண்டுகளில் சுமார் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
இந்த இளம் தலைமுறையினருக்கு பல்வேறு லட்சியங்கள் இருப்பதாகவும், அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவை “விஸ்வ குருவாக” மாற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
“போராட்டங்களை கண்டு அஞ்ச மாட்டேன்”
ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் தன்னை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இத்தகைய போராட்டங்களை கண்டு தான் அஞ்சப் போவதில்லை என்றும், ஒடிசா மக்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் தான் எதையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மாநிலத்திற்கு பெருமை சேர்க்காமல் இருந்திருக்கலாம்; ஆனால் தனது பணிகள் ஒருபோதும் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதில்லை என்றும், ஒடிசாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
