பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட வைக்கப்படாத நிலையில், அண்டை வீடுகளின் புகைப்படங்களை பயன்படுத்தி ரூ.21 லட்சம் வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் நிலவியதாகக் கூறப்படும் ஊழல் கலாச்சாரம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதுபோன்ற முறைகேடுகளுக்கு காரணம் என அவர் விமர்சித்தார். ஏழை மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசு, விளம்பர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாமல் நிர்வாகத்தில் கூடுதல் அக்கறை காட்டி, இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மத்திய அரசின் நலத்திட்ட நிதி தகுதியுள்ள பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தகுதியற்ற நபர்கள் நிதி பெறுவதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
