பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளின் மனநலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை முறையாக கையாளத் தவறியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு ரூ.5,404 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பில் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.3,574 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கின் இரண்டாம் கட்ட தீர்ப்பை ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிமன்றம் வெளியிட்டது. அதில், சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சுமார் ரூ.5,404 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகையில் சுமார் ரூ.4,000 கோடி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவிடப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பதின்ம வயதினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அவற்றின் செயல்திறன் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.
