இந்திய விமானப்படையின் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் திட்டத்திற்கான விரிவான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முன்மொழிவை பிரான்ஸ் இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, 114 ரபேல் விமானங்களில் 94 விமானங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நடவடிக்கை, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி இலக்குகளுக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு மற்றும் இந்திய விமானப்படையால் தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்திய நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பு
இந்தியாவில் நடைபெறும் உற்பத்திப் பணிகளில், டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து MBDA, சப்ரன் (Safran), தேல்ஸ் (Thales) உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனங்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், டாடா, லார்சன் & டூப்ரோ (L&T) உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் மூலம் பெரும் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1.6 லட்சம் கோடி தொழில் வாய்ப்பு
இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தித் துறையில் சுமார் ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்துறை வாய்ப்புகள் உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்திய விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து 62 ரபேல் விமானங்களுக்கு ஏற்கனவே ஆர்டர் வழங்கியுள்ளன. புதிய 114 விமானங்கள் வாங்கப்பட்டால், இந்தியாவில் செயல்படும் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 176 ஆக உயரும்.
மேலும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்காக கூடுதலாக 31 ரபேல்-எம் (Rafale-M) போர் விமானங்களை வாங்கும் விருப்பத்தையும் இந்திய கடற்படை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டமும் நிறைவேறினால், இந்திய ஆயுதப்படைகளில் உள்ள ரபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 200-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
