தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி நீர் விவகாரம் குறித்து நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
முன்னதாக, தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பொதுப் பட்ஜெட் மற்றும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டசபை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. கூட்டத் தொடக்கத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ், பாடகி ஜானகி, எழுத்தாளர் புவியரசு மற்றும் பூமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேகதாது குறித்து உதயநிதி கேள்வி
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தில் வேகமாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டார்.
மேலும், கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள் என்றும், காவிரி நீர் பிரச்சினை மற்றும் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதல்வர் விஜய் பதில்
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், காவிரி விவகாரம் தமிழகத்தின் உயிராதார பிரச்சினை என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது திட்டம் தொடர்பாக தமிழகத்தின் உரிமையை அரசு எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காது என்றும் உறுதியளித்தார்.
மேலும், 1969ஆம் ஆண்டிலேயே இதே விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றதை நினைவுகூர்ந்த அவர், கடந்த காலத்தை சுட்டிக்காட்டி அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், இது தமிழக மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினை என்றும் கூறினார்.
“அவமானத்தையும் தாங்க தயாராக இருக்கிறேன்”
கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூரு செல்லும் யோசனையை தானே முன்வைத்ததாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
“இன்றைய உலகில் பகை நாடுகள்கூட பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அப்படியிருக்கும்போது அண்டை மாநிலத்துடன் பேசிப் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பதில் தவறு இல்லை. அந்த முயற்சியால் எனக்கு அவமானம் ஏற்பட்டாலும், தமிழக மக்களின் நலனுக்காக எந்த அவமானத்தையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அவர் உருக்கமாக பேசினார்.
அமைச்சர் – எதிர்க்கட்சி மோதல்
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “முதல்வர் விஜய் யாரையும் பார்த்து பயப்படுபவர் அல்ல. அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து கேள்வி எழுப்பும் திமுக, தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி, “நான் மேகதாது மற்றும் காவிரி பிரச்சினை குறித்து பேசுகிறேன். ஆனால் அமைச்சர் தொடர்பில்லாத விஷயங்களை பேசிச் சபையை திசைதிருப்ப முயற்சிக்கிறார்” என்றார். தொடர்ந்து ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் கூற முயன்றபோது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவரை இடைமறித்து அமரச் செய்தார்.
