புதுடெல்லியில் இன்று நடைபெற்ற காலை உணவு சந்திப்பில், பல்வேறு கட்சிகளில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்த எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
திரிணமுல் காங்கிரஸிலிருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த எம்பிக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாறியவர்கள், அஜித் பவார் தரப்பைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்பிக்கள் உள்ளிட்ட மொத்தம் 45 எம்பிக்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்கள் மத்தியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும் என்றும் தெரிவித்தார். மேற்கு வங்கம் முன்னேறினால் நாடும் முன்னேறும் என்றும், மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும், வளர்ச்சி என்பது மேற்கு வங்கத்துடன் மட்டுப்படாமல் வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவடைய வேண்டும் என்றும், அங்கு சிறந்த இணைப்பு வசதிகள் மற்றும் விரைவான வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எம்பிக்கள் தங்களது உடல்நலம் மற்றும் மனநலத்தில் கவனம் செலுத்தி ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
அதேபோல், “உங்களைப் பற்றி என்ன பேசப்படுகிறது என்பதை நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று கூறிய அவர், தொலைக்காட்சி விவாதங்களில் தரக்குறைவான பேச்சுகளை தவிர்த்து எப்போதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் தீவிரமாக செயல்பட்டு இளைஞர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை அமைதியாகவும் பொறுப்புடனும் பதிவு செய்ய வேண்டும் என்றும், கோபம் அல்லது ஆத்திரத்துடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
