பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தெஹல்கா இதழின் நிகழ்ச்சியின் போது நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்போது, தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தருண் தேஜ்பால் சுமார் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு தருண் தேஜ்பாலை விடுவித்தது. பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அவர் அதிர்ச்சியடைந்ததாகவோ அல்லது பயந்ததாகவோ தெரியவில்லை என்று நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின்போது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தருண் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாக அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்டது.
மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் ஒரே மாதிரியாகவே நடந்துகொள்ள வேண்டும் என்ற பொதுவான விதி எதுவும் இல்லை என்றும், “ஒரு பெண் ‘வேண்டாம்’ என்று கூறினால், அதற்கு ‘வேண்டாம்’ என்பதே அர்த்தம்” என்ற தெளிவான செய்தியை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், தனக்கு 62 வயதாகிறது என்றும், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளதாகவும், குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, கோவா செஷன்ஸ் நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்து, தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததுடன், சரணடைய இரண்டு வார கால அவகாசமும் வழங்கியுள்ளது.
