திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக குறைந்த விலைக்கு பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பழநி அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், முறைகேடாக ரூ.2 கோடிக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் வாரிசுதாரர் முருகதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று, சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். பின்னர் அவரது முன்ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசாருக்கு, ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன், இன்று மாலை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
