தமிழக சட்டசபையில் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளின் நலன், உற்பத்தி அதிகரிப்பு, நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கிய நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், விவசாயிகளின் நலனை பாதுகாப்பதிலும், வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதிலும் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட பயனுள்ள திட்டங்கள் தொடரும் என்றும், புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
- விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு.
- பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசின் பங்காக ரூ.648 கோடி நிதி.
- தமிழ்நாடு மண்வள இயக்கம் அமைக்க ரூ.122.51 கோடி.
- நெல் விதை மானியத்திற்கு ரூ.34.72 கோடி.
- மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுக்கு ரூ.36 கோடி.
- ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான உழவர் செயலிக்கு ரூ.2 கோடி.
- பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.203.64 கோடி.
- தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி.
- பருத்தி உற்பத்தி மேம்பாட்டிற்கு ரூ.27.21 கோடி.
- வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடி.
- அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்திற்கு ரூ.56.72 கோடி.
- காட்டுப்பன்றி சேதத் தடுப்பிற்கு ரூ.7.35 கோடி.
- விளைபொருட்களை பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் வழங்க ரூ.10 கோடி.
- தோட்டக்கலை உயர் தொழில்நுட்ப சாகுபடிக்கு ரூ.41 கோடி.
- தென்னை சிறப்புத் திட்டத்திற்கு ரூ.41 கோடி.
- வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி.
- துளி நீர் பாசனத் திட்டத்திற்கு ரூ.785 கோடி.
- 24 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூ.227.2 கோடி.
- 500 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.8.5 கோடி.
- சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு ரூ.23 கோடி.
- உழவர் சந்தைகள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி.
- புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க ரூ.12 கோடி.
- தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க ரூ.5.20 கோடி.
மேலும், வேளாண் ஆராய்ச்சி, உயிர் உர உற்பத்தி, விதை சுத்திகரிப்பு, வேளாண் பொறியியல் பயிற்சி மையங்கள், உயிர்ம வேளாண்மை கல்லூரி, சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
