மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ஹமீம் மொண்டல் என்ற நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்த ஹமீம் மொண்டலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவின் முக்கிய இடங்களை கண்காணித்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மற்றும் நிழல் உலகத்தைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விசாரணையில் மேலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் வீடு, அலுவலகம் மற்றும் பொது நிகழ்ச்சிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் முதல்வரின் பல பொதுக்கூட்டங்களில் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவின் சினார் பூங்கா பகுதியில் உள்ள முதல்வரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மாநில தலைமைச் செயலகமான நபன்னா வளாகத்திலும் ஹமீம் மற்றும் அவரது கூட்டாளிகள் நடமாடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து கலந்து கொண்டு கலவரத்தைத் தூண்ட முயன்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. கைதான நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை.
