புதுடெல்லியில் மத்திய அரசின் அதிகாரிகளை மெட்டா நிறுவன நிர்வாகிகள் சந்தித்த நிலையில், குழந்தைகள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்கள் மற்றும் டீப்பேக் வீடியோக்களை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஜென்-ஸி தலைமுறையினருடன் உரையாடிய வீடியோ, பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பிரதமரின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறும், மன்னிப்பு கோருமாறும் மெட்டா நிறுவனத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்களை கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், மெட்டா நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தளங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகள், குறிப்பாக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் மற்றும் டீப்பேக் வீடியோக்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
