தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களைச் சந்திக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை குறித்து வெளியான ‘ஸ்ரீ டிவி’ செய்தியின் எதிரொலியாக, தற்போது அமைச்சர்கள் அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 15-ஆம் தேதி, அமைச்சர்களைச் சந்திக்க வந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள், பல மணி நேரம் காத்திருந்தபோதும் போதிய இருக்கை வசதி இல்லாததால் சிரமம் அனுபவிப்பதாக ‘ஸ்ரீ டிவி’ செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தியில், முன்பதிவு (Appointment) பெற்றவர்களுக்கு மட்டுமே அமைச்சர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படுவதால், பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், சிலர் சொந்தக் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி அதிருப்தி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் அமர்ந்து காத்திருக்க வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் சிரமமின்றி காத்திருக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அடிப்படை வசதிகள் குறித்த ஊடகச் செய்தியைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
