டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னை மற்றும் தனது தாயை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் மாணவர்களை மன்னிக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து, மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது தாய் குறித்து அவதூறான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை டெல்லி போலீசாரிடம் மாற்றப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடி, போராட்டத்தில் நடந்த சம்பவத்தை உலகமே பார்த்ததாகக் குறிப்பிட்டார். சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் சில இளைஞர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இளமைப் பருவத்தில் தவறுகள் நிகழ்வது இயல்பான ஒன்று என்றும், அதே நேரத்தில் அந்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர்களை தண்டிப்பதோ அல்லது நீதிமன்றத்திற்கு இழுப்பதோ சரியான தீர்வாக இருக்காது என்றும், வழி தவறிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே சமூகத்தின் கடமை என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். “அவர்களை நான் மன்னிக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
