தமிழகத்தில் முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) இன்று (ஜூலை 30) சென்னையில் கையெழுத்தாகின.
தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb, ஜெர்மனியைச் சேர்ந்த Nordex, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த MotiveLink ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை, மின்சார வாகனங்கள் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும்.
இந்த முதலீடுகளின் மூலம் தமிழ்நாட்டில் 2,920க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
