‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை வேண்டுமென்றே அவமதிப்பதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட தேசிய கவுரவத்தை அவமதித்தல் தடுப்பு (திருத்த) மசோதா, 2026, இன்று லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஏற்கனவே ராஜ்யசபாவில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன் பின்னர் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்த மசோதாவுக்கு எதிராக திமுக எம்.பி. ஆ.ராசா முன்வைத்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மசோதா லோக்சபாவிலும் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்டமாக, இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவரின் ஒப்புதலுக்குப் பிறகு மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.
இந்த திருத்தத்தின் மூலம், தற்போது தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
புதிய சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டுமென்றே அவமதிப்பது குற்றமாகக் கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
