சென்னை: நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் அமெரிக்காவில் பணியாற்றிய ஐ.டி. பொறியாளர் சரத் சுப்ரமணியன் சங்கர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, 2023 முதல் 2025 வரை இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் இல்லங்கள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனைகளை மேற்கொண்ட நிலையில், அவை அனைத்தும் போலி மிரட்டல்களாகவே உறுதி செய்யப்பட்டன.
இந்த வழக்கை தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அடையாளத்தை மறைக்க VPN மற்றும் டார்க் வெப் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்கு தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதிலளித்ததன் மூலம் அவரது அடையாளம் போலீசாருக்கு தெரியவந்தது.
கடந்த ஆறு மாதங்களாக கண்காணிப்பில் இருந்த அவருக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்ரமணியன் சங்கர், அமெரிக்காவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு எதிராக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு மட்டும் 33 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
