தெருநாய்கள் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தெருநாய்களால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மேலும், தடுப்பூசி மையங்களில் தேவையான கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்கவும் அறிவுறுத்தியது.
இந்த உத்தரவுகளை செயல்படுத்திய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தயாராக இருப்பதாகவும், அதை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அப்போது, “தெருநாய் கடி சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், தெருநாய் பிரச்சினையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை” என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்கூட தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசின் அறிக்கையில் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என்றாலும், களத்தில் அதன் பலன் தெரியவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
