தமிழகத்தின் 2026–27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முழுமையாக பதிவு செய்ய உரிமை கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்றுக் கருத்துகளையும் அமைதியாகக் கேட்டு ஜனநாயக முறையில் விவாதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, பேரவை வளாகத்திற்குள் ஒரு உறுப்பினரை கைது செய்ய மட்டுமே சபாநாயகரின் முன் அனுமதி அவசியம் என்றும், பேரவைக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய அத்தகைய அனுமதி தேவையில்லை என்றும் விளக்கமளித்தார். ஆனால், 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்படும் சூழலில் அதுகுறித்த தகவல் பேரவைத் தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
பேரவையில் உறுப்பினர்கள் சைகை காட்டுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் விஜய் பேரவையில் சைகை காட்டியதில் விதிமீறல் எதுவும் இல்லை என்றும், நடைமுறைகளுக்கு உட்பட்டே அது நடைபெற்றதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியினரும் அனுமதி கோரினால், அவர்கள் செய்யும் சைகையின் தன்மையைப் பொறுத்தே அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது.
